வேளாண் சட்டங்களை எதிர்த்து முழுஅடைப்பு; விவசாயிகளுக்கு கர்நாடக முதல்-மந்திரி எச்சரிக்கை


வேளாண் சட்டங்களை எதிர்த்து முழுஅடைப்பு; விவசாயிகளுக்கு கர்நாடக முதல்-மந்திரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Sep 2021 7:28 PM GMT (Updated: 26 Sep 2021 7:28 PM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவில் இருந்து இயல்பு நிலை திரும்பும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது சரியல்ல என்று கூறி விவசாயிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.

முழுஅடைப்பு போராட்டம்
மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனால் அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் இன்று(திங்கட்கிழமை) நாடு தழுவிய ‘பாரத் பந்த்’(பொது வேலை நிறுத்தம்) போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகள் அறிவித்தபடி இன்று பாரத் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகத்திலும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை ஏற்கனவே விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். கர்நாடகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு 200-க்கும் மேற்பட்ட சங்கங்கள், காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சரியல்ல
பெலகாவியில் கடந்த 2019, 2020 ஆகிய 2 ஆண்டுகளில் பலத்த மழை பெய்து பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டன. சேதம் அடைந்த 44 ஆயிரத்து 205 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,864 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பயிர்கள் சேதம் அடைந்த 1.56 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.263 கோடி கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.கரும்பு பாக்கி தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த பாக்கி தொகையை பட்டுவாடா செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து இப்போது தான் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது சரியல்ல.

சர்க்கரை இயக்குனரகம்
பொருளாதார நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டும். அதனால் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மாநிலத்தில் தற்போது பருவகால காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 3-ந் தேதி சர்க்கரை இயக்குனரகம் பெங்களூரு விதான சவுதாவில் இருந்து பெலகாவி சுவர்ண சவுதாவுக்கு மாற்றப்படும். இனிமேல் சர்க்கரை இயக்குனரகம் நிரந்தரமாக பெலகாவி சுவர்ண சவுதாவில்தான் செயல்படும். அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் நிரந்தரமாக பெலகாவி சுவர்ண சவுதாவுக்கு மாற்றப்படும். சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதனால் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் வழக்கம்போல் ஓடும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story