பஞ்சாப்பில் 15 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்பு


பஞ்சாப்பில் 15 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்பு
x
தினத்தந்தி 26 Sep 2021 9:03 PM GMT (Updated: 26 Sep 2021 9:03 PM GMT)

சரண்ஜித் சிங் சன்னியின் மந்திரிசபை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.15 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் கடந்த 18-ந்தேதி திடீரென ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அவரது மந்திரிசபையில் தொழிற்கல்வித்துறை மந்திரியாக இருந்த சரண்ஜித் சிங் சன்னி (வயது 58) புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓ.பி.சோனி ஆகியோரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

சரண்ஜித் சிங் சன்னியின் மந்திரிசபை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 15 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய மந்திரிகளில் 7 பேர் புதுமுகங்கள் ஆவர். மேலும் முந்தைய அமரிந்தர் சிங் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த 8 பேர் மீண்டும் மந்திரி பதவியை பெற்றுள்ளனர். இதைப்போல அமரிந்தர் சிங் மந்திரிசபையில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு விலகிய ராணா குர்ஜித் சிங் மீண்டும் மந்திரியாகி உள்ளார். புதிய மந்திரிகளுக்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story