இரண்டாவது தவணையாக கோவிஷீல்டுக்கு பதிலாக கோவேக்சின் செலுத்தி கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்


இரண்டாவது தவணையாக கோவிஷீல்டுக்கு பதிலாக கோவேக்சின் செலுத்தி கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்
x
தினத்தந்தி 27 Sep 2021 5:39 PM GMT (Updated: 27 Sep 2021 5:39 PM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பதிலாக கோவேக்சின் தடுப்பூசியை இரண்டாம் தவணையாக செலுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பதிலாக கோவேக்சின் தடுப்பூசியை இரண்டாம் தவணையாக  செலுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


 கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையாக கோவிஷீல்டு  செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும்போது கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் தர வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

புற்றுநோய் நோயாளி ஒருவர் தொடர்ந்த மனுவில், கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்திக் கொண்ட தனக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியாக கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த  மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி, மத்திய அரசு இதற்கான விளக்கத்தை  அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த வழக்கின் மனுதாரரான வழக்கறிஞர் மதுர் மிட்டல் ஒரு புற்றுநோயாளி ஆவார். அவர் தற்போது புற்றுநோய்க்கான சிசிச்சையில் உள்ளார். மேல்சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா செல்ல உள்ளதால்  இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ பரிந்துரையின் படி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பதிலாக கோவேக்சின் தடுப்பூசியை இரண்டாம் தவணை தடுப்பூசியாக செலுத்திக் கொள்ள அனுமதிக்க வெண்டும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் 13, 2021 அன்று முதல் தவணை தடுப்பூசியாக கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்பட்டு  டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இரண்டாம் தவணையாக அதே தடுப்பூசியை போட்டுக் கொண்டால் மீண்டும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்ய முயன்றும், கோவேக்சின் தடுப்பூசியை முன்பதிவு செய்ய முடியவில்லை.

மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதில், தற்போது உள்ள நடைமுறைப்படி, ஒருவர் முதல் தவணையாக எடுத்துக்கொண்ட அதே தடுப்பூசி மருந்தை தான் இரண்டாவது தவணையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இரு வேறு தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான ஆற்றல் உருவாகிறது என்பது போன்ற சில சம்பவங்களும் நடந்துள்ளன. இது தொடர்பாக ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, தனக்கு கோவேக்சின் போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Next Story