வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sep 2021 6:57 PM GMT (Updated: 27 Sep 2021 6:57 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி, 

நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விவசாயிகள், இயலாமையால் வேறு வழியின்றி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதை காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்கிறது. விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால், நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும். நாடு இதற்கு முன்பு எத்தனையோ பிரதமர்களை சந்தித்துள்ளது. மோடிக்கு பிறகும் பிரதமர்கள் வருவார்கள். எனவே, பிரதமராக இருக்கும்போது ஆணவமாக இருக்கக்கூடாது.

நாட்டின் 60 சதவீத மக்கள் பேசும்போது, அதை பிரதமர் கேட்க வேண்டும். அவர்களது குறைகளை கேட்க வேண்டும். கடந்த ஜனவரி 22-ந் தேதி, பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஒரு போனில் அழைக்கும் தூரத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

அந்த அழைப்பை விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. அவர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான குறைகளை கேட்க வேண்டும். நாங்கள் இந்த தவறுகளை செய்து விட்டோம், அதை சரி செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, விவசாயிகளை நாட்டின் எதிரிகளாக சித்தரிக்க பா.ஜனதா முயன்று வருகிறது. அதனால்தான் விவசாயிகள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story