மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் மீது தாக்குதல்


மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 Sep 2021 8:25 PM GMT (Updated: 27 Sep 2021 8:25 PM GMT)

மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும், அதன் தலைவரான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோற்றுப்போனார்.

எனினும் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள அவர், தனது சொந்த தொகுதியான பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக விரும்பினார்.எனவே அதற்கு வசதியாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஷோபந்தேவ் சட்டோபாத்யாய் பதவி விலகினார். இதனால் காலியான பவானிபூர் தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பிரியங்கா திப்ரேவால் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தேர்தல் பிராசராத்தின் இறுதி நாளான நேற்று பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை ஆதரித்து, பா.ஜ.க. தேசிய துணைத்தலைவரும், எம்.பி.யுமான திலீப் கோஷ் பவானிபூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்குள்ள தடுப்பூசி மையத்துக்குள் சென்று வாக்கு சேகரித்தார். அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் திலீப் கோசுடன் தகராறில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story