டெல்லி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டப்பணியை மோடி பார்வையிட்டது சிந்தனையற்ற செயல்: காங்கிரஸ்


டெல்லி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டப்பணியை மோடி பார்வையிட்டது சிந்தனையற்ற செயல்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 27 Sep 2021 10:30 PM GMT (Updated: 27 Sep 2021 10:30 PM GMT)

சென்டரல் விஸ்டா திட்டப்பணியை பார்வையிட்டது சிந்தனையற்ற, உணர்வற்ற செயல் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசினார்.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானப் பணி திட்டம் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் அவர் பேசினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ‘ஏதாவது ஆஸ்பத்திரி கட்டுமானப் பகுதிக்கு பிரதமர் சென்றிருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் அவர் சென்டரல் விஸ்டா திட்டப்பணியை பார்வையிட்டது சிந்தனையற்ற, உணர்வற்ற செயல். அதற்கு ஆதரவு அளிக்க முடியாது.

இதற்கு முன் பிரதமர், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஆஸ்பத்திரி, ஆக்சிஜன் உற்பத்தி மையத்துக்கு சென்றது மாதிரி தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் நாம் கொரோனாவால், நமது அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரதமர், ரூ.25 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை பார்வையிட்டுள்ளார். அவர் அங்கு சென்ற நேரம் கேள்விக்குரியது. நாடு இன்னும் கொரோனா உண்டாக்கிய வலி, வேதனை, துயரத்தில் இருந்து மீளவில்லையே?’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story