புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு


புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு
x
தினத்தந்தி 27 Sep 2021 10:59 PM GMT (Updated: 27 Sep 2021 10:59 PM GMT)

புதுச்சேரியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்த செல்வகணபதி முதல் முறையாக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. சார்பில் 2 பேர் தேர்வானார்கள்
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் புதுச்சேரியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்த செல்வகணபதி முதல் முறையாக போட்டியின்றி தேர்வு ஆகியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. சார்பில் 2 பேர் தேர்வானார்கள்.
புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவைக்கு என தலா ஒரு எம்.பி.க்கள் உள்ளனர்.

புதிய எம்.பி. தேர்தல்
தற்போது மாநிலங்களவை (மேலவை) எம்.பி.யாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வருகிற 6-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் செல்வகணபதி வேட்பாளராக போட்டியிட்டார். அவர் கடந்த 22-ந்தேதி தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

வெற்றி உறுதி
அவரை தவிர போட்டியிட சுயேச்சையாக 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது பெயர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் பரிந்துரை செய்யாததால் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே போட்டியில் செல்வகணபதி மட்டுமே இருந்தார்.இந்தநிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளான நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போட்டியில் செல்வகணபதி மட்டுமே இருந்ததால் அவர் வெற்றிபெறுவது ஏற்கனவே உறுதியாகி இருந்தது.

முதல்முறையாக தேர்வு
இதையடுத்து செல்வகணபதி மேலவை எம்.பி.யாக போட்டியின்றி வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து முதல்முறையாக பா.ஜ.க. சார்பில் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சட்டசபை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 6-ந்தேதியோடு மாநிலங்களவையில் காலியாகும் ஒரு இடத்தினை, புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்களாக கொண்டு நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வகணபதி போட்டியின்றி தேர்வானார் என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வெற்றி சான்றிதழ்
இதைத்தொடர்ந்து நேற்று மாலை தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமியிடம் இருந்து வெற்றிபெற்றதற்கான சான்றிதழை செல்வகணபதி பெற்றுக்கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வி.பி.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்தில்....
தமிழகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைவதாக இருந்தது. அதுபோல வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 29-ந் தேதி முடிவதாக இருந்தது. 2 பேரும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடத்தை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு பதவிகளுக்கான இடைத்தேர்தல் தனித்தனியாக நடத்தப்பட்டது.இதில் 3 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டனர். தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் தி.மு.க. கட்சிக்கு மட்டுமே வெற்றிவாய்ப்பு இருந்தது. எனவே அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியில் குதிக்கவில்லை. தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ்குமார் வைத்திலிங்கத்தின் இடத்துக்கும், டாக்டர் கனிமொழி கே.பி.முனுசாமியின் இடத்துக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

போட்டியின்றி தேர்வு
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 22-ந் தேதியாகும். 23-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தவிர 3 சுயேச்சை வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படுவதாக 23-ந் தேதி அன்று தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார்.27-ந் தேதி (நேற்று பிற்பகல் 3 மணி வரை) வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்படாததைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை சீனிவாசன் வெளியிட்டார்.

வைத்திலிங்கத்தின் இடத்துக்கு ராஜேஷ்குமாரும், கே.பி.முனுசாமியின் இடத்துக்கு டாக்டர் கனிமொழி சோமுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து 2 பேருக்கும் அதற்கான சான்றிதழை சீனிவாசன் வழங்கினார்.

Next Story