பஞ்சாப் அரசியல் சூழ்நிலையும்...! ராகுல் காந்தி கேரள பயணமும்...!


பஞ்சாப் அரசியல் சூழ்நிலையும்...! ராகுல் காந்தி கேரள பயணமும்...!
x
தினத்தந்தி 29 Sep 2021 9:20 AM GMT (Updated: 29 Sep 2021 9:20 AM GMT)

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாகவே, கோழிக்கோடு, மலப்புரத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று திடீர் பயணமாக  டெல்லி சென்றார்.  அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. 

 இந்த நிலையில் திடீர் திருப்பமாக  நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் விலகியது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாகவே, கோழிக்கோடு, மலப்புரத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.

அத்திட்டத்தின் ஓர் பகுதியாக தற்போது கேரளா சென்றுள்ள ராகுல், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசவுள்ளார். பின்னர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். வியாழக்கிழமை காலை, டெல்லிக்கு அவர் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

 காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரு சில மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில் அதிரடியான அரசியல் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி கேரளா சென்றிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் டெல்லியில் இல்லாத இந்த சூழல்நிலையில்  ராகுல் காந்தி கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டதன் பின்னணி குறித்து பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ராசியா சுல்தானா, தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மந்திரி சபை  நேற்று மாலை கூடிய நிலையில், இன்று காலையும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயலாளர் பர்கத் சிங், சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "இதில் கவலையடைய ஒன்றுமில்லை. அனைத்தும் சரி செய்யப்படும்" என்றார். ராஜினாமா முடிவை சித்து திரும்பபெறாத பட்சத்தில், தலைவர் பொறுப்பு இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்த குல்ஜித் சிங் நக்ரா, அல்லது எம்.பி. ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரில் எவரேனும் ஒருவருக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

Next Story