ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகம் - உத்தவ் தாக்கரே ஆலோசனை


ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகம் - உத்தவ் தாக்கரே ஆலோசனை
x
தினத்தந்தி 29 Sep 2021 10:31 PM GMT (Updated: 29 Sep 2021 10:31 PM GMT)

மும்பையில் ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர்.

மும்பை,

மும்பையில் இந்திய ராணுவத்தின் பெருமையை பறை சாற்றும் வகையில் போர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை அமைப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளா் சீத்தாராம் குந்தே, மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் நினைவிடம், அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என முதல்-மந்திரி கூறினார். மேலும் அவர் அதற்கான இடத்தை இறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய ராணுவத்தின் பெருமை, வீரம், வரலாறை கூறும் வகையில் போர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை விரைந்து முடித்து, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அருங்காட்சியகத்தின் தன்மையை முடிவு செய்ய ராணுவத்தினர் அடங்கிய ஆலோசனை, வடிவமைப்பு கமிட்டி அமைக்கப்படும். மேலும் திட்டத்தில் பல்வேறு தடைகளை மீறி ராணுவ வீரர்கள் எப்படி நாட்டை பாதுகாக்கின்றனர் என்பது கூறப்படும். இதேபோல மராட்டியத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், அதிகாரிகளின் வீரம் மற்றும் சத்ரபதி சிவாஜி மன்னர் குறித்தும் நினைவிடத்தில் இடம்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story