மராட்டியத்திற்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் - நானா படோலே குற்றச்சாட்டு


மராட்டியத்திற்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் - நானா படோலே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Sep 2021 12:01 AM GMT (Updated: 30 Sep 2021 12:01 AM GMT)

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மராட்டியத்திற்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக நானா படோலே குற்றம் சாட்டினார். மேலும் இடஒதுக்கீட்டுக்கு மூடு விழா நடத்தவும் பா.ஜனதா முயற்சி செய்வதாக அவர் கூறினார்.

பால்கர்,

பால்கர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட பஞ்சாயத்து இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலத்தில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றுநோயை சமாளிக்க தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

தற்போது கனமழை காரணமாக மாநிலத்தில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. சாலைகளின் இந்த மோசமான நிலைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைக்கவில்லை.

இந்த 1 ஆண்டு காலத்தில் மட்டும் குறைந்தது 3 முறையாவது ஏதாவது ஒரு வகையில் இயற்கை பேரிடர் மராட்டியத்தை தாக்கி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க மத்திய அரசின் உதவி வழங்கப்படவில்லை.

மராட்டியத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அவர் குஜராத் சென்று 1,000 கோடி நிவாரணம் அறிவித்தார். ஆனால் நம் மாநிலத்திற்கு எதுவும் இல்லை.

இது ஒரு தெளிவான பாகுபாடு. இயற்கை பேரிடருக்காக உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அவர் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தனது பழைய அறிக்கையில் இடஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என கூறியிருந்தார். இப்போது இதை செயல்படுத்தி இடஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்த பா.ஜனதா முனைந்துள்ளது. அதனால் தான் உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாட்டின் சொத்துகள் மற்றும் திட்டங்களை விற்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்டே விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றுகிறது. புல்லட் ரெயில் திட்டம் ஆடம்பரமானவர்கள் மற்றும் பணக்காரர்களுக்கானது. இதனால் ஏழைகள், பழங்குடியினர் மற்றும் சாதாரண மக்களுக்கு எந்த பலனும் இல்லை” என்றார்.

Next Story