உத்தரபிரதேசம் காட்டாட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது - பிரியங்கா காந்தி தாக்கு


உத்தரபிரதேசம் காட்டாட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது - பிரியங்கா காந்தி தாக்கு
x
தினத்தந்தி 30 Sep 2021 9:50 PM GMT (Updated: 30 Sep 2021 9:50 PM GMT)

உத்தரபிரதேசம் காட்டாட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் போலீசார் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே தங்கியிருந்த மணிஷ் குப்தா (வயது 36) என்ற வியாபாரியிடம் விசாரணை நடத்தியபோது அவரை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் உயிரிழந்தார். 

மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கோரக்பூரில் வியாபாரி ஒருவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார். இது மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காட்டாட்சியின் பிடியில் உத்தரபிரதேசம் சிக்கியிருக்கிறது. குற்றவாளிகள் மீது மென்மையாகவும், சாதாரண மக்களிடம் காட்டுமிராண்டித்தனமாகவும் போலீசார் நடந்துகொள்வது காட்டாட்சி ஆகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக அவர் போலீசாரால் கொல்லப்பட்ட மணிஷ் குப்தாவின் மனைவியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story