லடாக் எல்லையில் சீனா மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்; இந்தியா எச்சரிக்கை


லடாக் எல்லையில் சீனா மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்; இந்தியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2021 9:12 AM GMT (Updated: 1 Oct 2021 9:12 AM GMT)

லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தைகள் அமைதிக்கு இடையூறு விளைவிக்கிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுடெல்லி:

லடாக் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே சர்ச்சைக்குரிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அங்குள்ள கல்வான் பள்ளத் தாக்கு, பாங்காக் ஏரி உள்ளிட்ட 4 பகுதிகளில் சீன படைகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தனர். இதனால் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் மாதத்தில் சீனா நீண்ட தூரத்துக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்தது . இதனை இந்திய ராணுவ வீரர்களை தடுத்தார்கள்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 40-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் 5 பேர் மட்டுமே இறந்தாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சமசர பேச்சுவார்த்தைகளை அடுத்து இரு நாட்டு படைகளும் குறிப்பிட்ட தூரத்துக்கு விலக்கிக் கொள்ளப்பட்டன. நேருக்கு நேர் படைகள் நிற்பது தவிர்க்கப்பட்டது. அங்கிருந்து பெரும்பாலான படைகளையும் இரு நாடுகளும் வாபஸ் பெற்றன.

சீனாவின் "ஆத்திரமூட்டும்" நடத்தை மற்றும்  ஒருதலைப்பட்சமான சீன இராணுவத்தின் முயற்சிகள் அமைதிக்கு இடையூறு விளைவிக்கிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக அந்த பகுதியில் அமைதி நிலவி வந்தது. இந்த நிலையில் லடாக் எல்லை பகுதியில் சீனா மீண்டும் படைகளை குவித்து வருகிறது. இதுபற்றி இந்திய தரப்பில் இருந்து சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இந்தியா வெளியிட்ட தகவலில், கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைபட்சமாக முயற்சி மேற்கொள்கிறது. இதனால் எல்லை பகுதியில் அமைதி மீறல் ஏற்பட்டுள்ளது.

சீனா ராணுவம் எல்லை பகுதியில் தொடர்ந்து ராணுவ வாகனங்களை நிறுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவும் எதிர்வரிசையில் ஆயுதப்படைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாசி கூறும்போது, “கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க சீனா விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம். இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பதற்றங்களை தணிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story