இடைத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய விவகாரத்தில் எனக்கு உத்தரவிட சித்தராமையா யார்? குமாரசாமி கேள்வி


இடைத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய விவகாரத்தில் எனக்கு உத்தரவிட சித்தராமையா யார்? குமாரசாமி கேள்வி
x

இடைத்தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய விவகாரத்தில் எனக்கு உத்தரவிட சித்தராமையா யார்? என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சிந்தகி தொகுதியில் நாஜியா சகீலாவும், ஹனகல் தொகுதியில் நியாஜ் சேக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் பா.ஜனதாவுக்கு சாதகமாக இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்களை ஜனதாதளம் (எஸ்) கட்சி நிறுத்தி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இடைத்தேர்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், பா.ஜனதாவுக்கு சாதகமாகவும் முஸ்லிம் வேட்பாளர்களை ஜனதாதளம் (எஸ்) கட்சி நிறுத்தி உள்ளது. முஸ்லிம்களுக்கு திடீரென்று ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிப்பது ஏன்?.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஜனதாதளம் (ஏஸ்) கட்சி இருந்திருந்தால், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் கடந்த சட்டசபை தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை. இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளுக்கு மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களை அவசர, அவசரமாக நிறுத்துவது ஏன்?"என்றார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து குமாரசாமி கூறும்போது, ‘‘ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எனக்கு ஆர்டர்(உத்தரவு) போடுவதற்கு சித்தராமையா யார்?. எந்த தொகுதியில், எந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதை சித்தராமையாவிடம் கேட்டு தான் செய்ய வேண்டுமா?.

ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்து, அவரிடம் அனுமதி வாங்குவதற்காக பின்னால் செல்ல வேண்டும் என்று சித்தராமையா நினைக்கிறாரா?. எங்களது கட்சி விவகாரத்தில் சித்தராமையா தலையிட வேண்டிய அவசியமில்லை. எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’’ என்றார்.

Next Story