லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு


லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 2:22 AM GMT (Updated: 6 Oct 2021 2:22 AM GMT)

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

லக்னோ,

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றுக்கு, துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அங்கு விவசாயிகள் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதாக தெரிகிறது.

அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் காரைக்கொண்டு மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது.

வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், மேலும் சிலரும் சீதாப்பூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீபேந்திர ஹூடா ஆகியோர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு லகிம்பூர் மாவட்டம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியது. ஆனால், சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோர் லகிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Next Story