‘நீட்’ தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கை; கேரள முதல்-மந்திரியிடம் வழங்கிய திமுக எம்.பி.


‘நீட்’ தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கை; கேரள முதல்-மந்திரியிடம் வழங்கிய திமுக எம்.பி.
x
தினத்தந்தி 6 Oct 2021 10:36 AM GMT (Updated: 6 Oct 2021 10:36 AM GMT)

‘நீட்’ தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை கேரள முதல்-மந்திரியிடம் திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் வழங்கினார்.

திருவனந்தபுரம்,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021” என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளை செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிந்துரைக்குமாறு தமிழக அரசை இந்த குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திரா, சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா ஆகிய 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதினார். அதில் ஏ.கே.ராஜனின் அறிக்கையை திமுக எம்.பி.க்கள் மாநில முதல்-மந்திரிகளிடம் நேரடியாக வழங்குவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி கேரள் முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், அவரிடம் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை வழங்கினார். 

Next Story