ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களை மேம்படுத்துவதற்கான புதிய மந்திரம் - பிரதமர் மோடி உரை


ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களை மேம்படுத்துவதற்கான புதிய மந்திரம் - பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 6 Oct 2021 10:51 AM GMT (Updated: 6 Oct 2021 12:06 PM GMT)

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்வாமித்வா திட்ட விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்றார்.

புது டெல்லி,

பிரதமர் மோடி  மத்திய பிரதேசத்தில் இன்று  கிராமப் பகுதிகளை வரைபடம் ஆக்கும்  (ஸ்வாமித்வா) திட்ட  பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் வழியாக டெல்லியில் இருந்தபடியே கலந்துரையாடினார். 

அவர் எலக்ட்ரானிக் வடிவிலான சொத்து அட்டைகளை(இ-அட்டைகள்)  1 லட்சத்து 71 ஆயிரம் பயனாளர்களுக்கு இந்த  திட்டத்தின் கீழ் வழங்கினார். அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளை வரைபடம் ஆக்குவதற்கான ‘ஸ்வாமித்வா’ திட்டம் ஆரம்ப காலத்தில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மராட்டியம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள  சில கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தால் 22 லட்சம் குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மோடி ஆற்றிய உரையில் 

ஸ்வாமித்வா திட்டமானது சட்ட ஆவணங்களை மட்டும் வழங்கக்கூடிய திட்டம் அல்ல. இத்திட்டம் நாட்டிலுள்ள கிராமங்களில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்பிக்கை மற்றும் மேம்பாடு ஏற்படுத்திட கிடைத்துள்ள புதிய மந்திரம்.

ஸ்வாமித்வா திட்டம் ஒரு சிறிய அளவிலான திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய பிரதேச மாநிலம் இத்திட்டத்தை வேகமாக செயல்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளது. 3000 கிராமங்களை சேர்ந்த 1.70 லட்சம் குடும்பங்கள் ‘ சொத்து அட்டைகளை வாங்கியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின்  இத்திட்டமானது கிராமப்புற வசிப்பிடங்களில் வாழ்வோருக்கு  சொத்து உரிமையை அளிக்க ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துக்களை கடன் வாங்குவதற்காகவும் மற்றும் பிற நிதி தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளளாம்.

இத்திட்டம் புதிதாக வந்துள்ள டிரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பம் மூலம் கிராமங்களில் உள்ள வாழ்விட பகுதிகளின் எல்லைகளை வரையறை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டம் டிரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உந்து சக்தியை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story