நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி


நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 6 Oct 2021 8:06 PM GMT (Updated: 6 Oct 2021 8:06 PM GMT)

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் உ.பி.யில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர்.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரில் கடந்த 3-ந் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வர இருந்த மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

அவர்கள் மீது பா.ஜனதாவினர் காரைக்கொண்டு மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் மேலும் 2 விவசாயிகள், 3 பா.ஜனதா தொண்டர்கள் என 6 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதியது, மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது.

4 விவசாயிகள் உள்பட 8 பேரின் உயிரை பலிவாங்கிய இந்த சம்பவத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா 3-ந் தேதி இரவிலேயே லகிம்பூருக்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் சீதாப்பூரில் அவரை 4-ந் தேதி காலையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அங்குள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அவர் நேற்று காலையில்தான் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் மீதும், கட்சியினர் மீதும் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சூழலில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று லக்னோ சென்றார். முன்னதாக லகிம்பூர் செல்வதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் 5 பேர் மட்டும் லகிம்பூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதைப்போல தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரியங்காவும் லகிம்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டாா். லக்னோ விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காரில் லகிம்பூர் புறப்பட தயாராகினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், தங்கள் காரில்தான் லகிம்பூர் செல்ல வேண்டும் என ராகுல் காந்தியை வலியுறுத்தினர்.

இதனால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரது காரில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.  பிரியங்கா காந்தியும் சீதாபூரிலிருந்து நேரடியாக லகிம்பூர் சென்றடைந்தார். அதைபோல் , ராகுல் காந்தி இரவு 7.45 மணிக்கு லகிம்பூர் சென்றடைந்தார். இந்நிகழ்வின் போது, ​​அவருடன் பல வாகனங்களின் அணிவகுத்து சென்றன.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத்தின் குடும்ப உறுப்பினர்களை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தனர்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “தியாகி லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் நீதி கிடைக்கும் வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும். உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன் லவ் ப்ரீத்” என்று பதிவிட்டிருந்தார். 

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “பத்திரிகையாளர் தியாகி ராமன் காஷ்யப்பின் குடும்பத்தினருடனான சந்திப்பில் எனது இரங்கலை தெரிவித்தேன். மனிதாபிமானமற்ற கொடுமையால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இந்தக் குடும்பங்களுக்கு என்ன வேண்டும்? நீதி. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்!” என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 




Next Story