சொகுசு கப்பலில் போதை விருந்து; வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர் கைது


சொகுசு கப்பலில் போதை விருந்து; வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 3:35 AM GMT (Updated: 7 Oct 2021 3:35 AM GMT)

மும்பை சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவரை போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது. கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை விருந்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சோதனையில் போதை விருந்தில் பங்கேற்ற பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்பட பலரை மராட்டிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  இதில் ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகிய 3 பேரிடம் இருந்து 13 கிராம் கொகைன், 5 கிராம் எம்.டி., 21 கிராம் கஞ்சா, 22 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 17 செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஷாருக்கானின் மகன் ஆர்யன் கார் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.  

இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். பந்த்ரா பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த நபர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றும் அவரிடம் இருந்து மெப்கிட்ரொன் (எம்.டி.) என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதன் மூலம் சொகுசு கப்பலில் போதை விருந்து வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Next Story