லகிம்பூர் வன்முறை : விரைவில் மத்திய மந்திரி மகன் கைது - உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி உறுதி


லகிம்பூர் வன்முறை : விரைவில் மத்திய மந்திரி மகன் கைது - உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி உறுதி
x
தினத்தந்தி 7 Oct 2021 8:06 AM GMT (Updated: 7 Oct 2021 8:13 AM GMT)

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி மகனை கைது செய்ய முயற்சிப்பதாகஉத்தரபிரதேச போலீஸ் ஐஜி லட்சுமி சிங் கூறினார்.

புதுடெல்லி

உத்தரப்பிரதேச மாநிலம், லகிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தின் போது  மத்திய மந்திரி  மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் மத்திய மந்திரி  அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளை இடித்து தள்ளியப்படி சென்ற செயல் இருவரின் நன்கு திட்டமிடப்பட்ட சதிச் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மந்திரியின் மகன் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கிச் சுட்டதாகவும், அதில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் 22 வயது மகன் குர்விந்தர் இறந்தார் என கூறப்பட்டு உள்ளது.அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப்பிரதேச போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தேடி வருவதாகவும், லகிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக அவரை கைது செய்ய முயற்சிப்பதாகவும் உத்தரபிரதேச  போலீஸ் ஐஜி லட்சுமி சிங் கூறினார்.

மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

முன்னதாக ஆஷிஷ் மிஸ்ரா கூறும் போது நான் சம்பவத்தன்று காலை 9 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பன்வாரிப்பூரில் இருந்தேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைக்கிறேன் என கூறினார்.

Next Story