உத்தரபிரதேசத்தில் 8 பேரை பலி வாங்கிய விவசாயிகள் போராட்ட வன்முறை தொடர்பாக மத்திய மந்திரியின் மகனுக்கு சம்மன்


உத்தரபிரதேசத்தில் 8 பேரை பலி வாங்கிய விவசாயிகள் போராட்ட வன்முறை தொடர்பாக மத்திய மந்திரியின் மகனுக்கு சம்மன்
x
தினத்தந்தி 7 Oct 2021 6:06 PM GMT (Updated: 7 Oct 2021 6:06 PM GMT)

உத்தரபிரதேசத்தில் 8 பேரை பலி வாங்கிய விவசாயிகள் போராட்ட வன்முறை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காரை ஏற்றி கொலை
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் கடந்த 3-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது.அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர். அவர்கள் மீது பா.ஜனதாவினர் காரைக்கொண்டு மோதி பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த படுபாதக செயலை மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் போர்க்கொடி
இதைத்தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 8 பேரை பலிவாங்கிய இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது தந்தையும், மத்திய மந்திரியுமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும் இந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

கொலை வழக்கு பதிவு
இதைத்தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆஷிஷ் பாண்டே மற்றும் லவ்குஷ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.மேலும் இந்த வன்முறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எனினும் இதற்காக கால வரையறை எதுவும் போலீசார் நிர்ணயிக்கவில்லை. அதேநேரம், போலீசாரின் சம்மனை ஏற்று ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் ஐ.ஜி. லட்சுமி சிங் நேற்று தெரிவித்தார்.

விசாரணை கமிஷன் அமைப்பு
இதற்கிடையே லகிம்பூர் விவசாய போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக ஒரு நபர் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்து உள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவத்சவா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது.அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த 2018-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற இவர், கடந்த மாதம் 29-ந்தேதி தான் ஓய்வு பெற்றுள்ளார்.இந்த கமிஷன் 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

விவசாயிகள் காரை ஏற்றி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு நடந்த தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று, நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதும் ஆகும்.

பிரியங்கா கோரிக்கை
அதேநேரம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் விசாரணை கமிஷன் தேவையற்றது எனவும், பணியில் இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில்தான் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.இந்த வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் தனது சகோதரரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியுடன் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், ‘பணியில் இருக்கும் நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனே கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரின் கோரிக்கை ஆகும்’ எனவும் கூறினார்.

டெல்லி திரும்பிய ராகுல் காந்தி
முன்னதாக வன்முறையில் கொல்லப்பட்ட லவ்பிரீத் சிங் மற்றும் நச்சாதர் சிங் உள்ளிட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் பஞ்சாப், சத்தீஸ்கார் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் லக்னோ திரும்பினர். அங்கிருந்து ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். பிரியங்கா பரைக் மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார். மாலையில் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


Next Story