எடியூரப்பாவை பிடியில் வைத்துகொள்ளவே வருமான வரி சோதனை: குமாரசாமி


எடியூரப்பாவை பிடியில் வைத்துகொள்ளவே வருமான வரி சோதனை: குமாரசாமி
x
தினத்தந்தி 7 Oct 2021 7:45 PM GMT (Updated: 7 Oct 2021 7:45 PM GMT)

எடியூரப்பாவை பிடியில் வைத்து கொள்ளவே வருமான வரி சோதனை நடப்பதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களை எச்சரிக்க வேண்டும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நாடு சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களுக்கு தெரிவித்து எச்சரிக்க வேண்டும். ஆட்சி செய்யும் பா.ஜனதாவின் முதலீடு ஒன்றுமில்லை. காங்கிரசுக்கு 128 ஆண்டுகள் வரலாறு உள்ளதாக சொன்னால், அதற்கு பா.ஜனதாவினர், அப்போது இருந்த காங்கிரஸ் வேறு, தற்போது இருக்கும் காங்கிரஸ் வேறு என்று சொல்கிறார்கள். அதே போல் தான் அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ். வேறு, இப்போது இருக்கும் ஆர்.எஸ்.எஸ். வேறு என்று நான் சொல்கிறேன். சித்தராமையா கூறுவது போல் ஆர்.எஸ்.எஸ். தலீபான் கலாசாரத்தை கொண்டுள்ளது என்று சொல்ல மாட்டேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் என்ன நடக்கிறது, அதன் தாக்கம் என்ன என்பதை ஆராய்ந்து நான் உண்மை தன்மையை வெளிப்படுத்துகிறேன். தேவேகவுடா, அப்போது இருந்த ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசி கூறினார். அவரது கருத்து தற்போது உள்ள ஆர்.எஸ்.எஸ்.-க்கு பொருந்தாது.

குத்தகைக்கு கொடுக்கவில்லை
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் எடியூரப்பாவின் உதவியாளராக இருந்தவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது. எடியூரப்பாவை பிடியில் வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வருமான வரி சோதனை நடக்கலாம். ஆனால் இதற்கு சரியான காரணம் எனக்கு தெரியாது. சித்தராமையாவை கேட்டு நாங்கள் வேட்பாளரை நிறுத்த மாட்டோம். ஜனதா தளம்(எஸ்) கட்சி பா.ஜனதாவின் ‘பி’ டீம் என்று சித்தராமையா கூறினார். எங்கள் கட்சியை யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கவில்லை. இடைத்தேர்தலில் நாங்கள் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். காங்கிரசின் ஓட்டுகளை பிரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல.பா.ஜனதாவின் இன்னொரு முகம் தான் காங்கிரஸ்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதே தேவேகவுடா தான். கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து கட்சி கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கலபுரகியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினர்.


Next Story