லகிம்பூர் வன்முறை: உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி


லகிம்பூர் வன்முறை: உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 8 Oct 2021 8:32 AM GMT (Updated: 8 Oct 2021 8:32 AM GMT)

கொலை வழக்கை இப்படிதான் கையாள்வதா? என லகிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க- வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச போலீசார் இதுவரை மத்திய மந்திரி  மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவைஅரசு நியமித்துள்ளது.

ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் மத்திய மந்திரி  மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரின் மகனும் இதுவரை போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. லகிம்பூர் கெரி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் இன்று  உத்தரபிரதேச அரசுக்கு எதிராக  சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச அரசின் விசாரணையில் திருப்தி இல்லை.கொலை வழக்கை இப்படிதான் கையாள்வதா? உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். லகிம்பூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையும் தீர்வாக இருக்காது. 

பிரிவு 302 இன் கடுமையான குற்றச்சாட்டு இருக்கும்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் எவ்வாறு நடத்தப்படுவார்கள்?

உத்தரபிரதேச  டிஜிபியிடம் மற்றொரு ஏஜென்சி விசாரணையை எடுத்துக் கொள்ளும் வரையில் இந்த வழக்கின் சான்றுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்த வழக்கின் ஆதாரங்களை பாதுகாக்க மாநிலத்தின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்தார்.

Next Story