போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி


போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனின் ஜாமின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 8 Oct 2021 11:46 AM GMT (Updated: 8 Oct 2021 11:48 AM GMT)

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். 

தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்ததும் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், என்.சி.பி. காவலை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.

ஆனால்  தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் காவலில் அனுப்ப நீதிமன்றம்  அனுமதி அளிக்கவில்லை. போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறிய  நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
 
இதற்கிடையில் ஜாமின் வழங்க ஆர்யன் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க என்.சி.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஆர்யன் கானின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story