கர்நாடகத்தில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை மந்திரி பதில்


கர்நாடகத்தில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை மந்திரி பதில்
x
தினத்தந்தி 8 Oct 2021 5:14 PM GMT (Updated: 8 Oct 2021 5:14 PM GMT)

கர்நாடகத்தில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மந்திரி பி.சி.நாகேஸ் பதில் கூறியுள்ளார்.

பள்ளிகளை திறக்க கோரிக்கை

கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா முதல் அலை தொடங்கியது. அப்போது பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பின்னர் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பூட்டப்பட்டு இருந்த கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

மாணவர்கள் தயாராக உள்ளனர்

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடகத்தில் 7 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அதிகாரிகள், முதல்-மந்திரியிடம் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் உடுப்பியில் பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. இதனால் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம். தற்போது தசரா விடுமுறை அமலில் உள்ளது. அந்த விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களும் பள்ளிக்கு வர தயாராக உள்ளனர். இதனால் பள்ளி திறந்ததும் அனைத்து மாணவர்களும் வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story