வருமான வரி சோதனைக்கும், எடியூரப்பாவுக்கும் தொடர்பு இல்லை: மந்திரி ஈசுவரப்பா


வருமான வரி சோதனைக்கும், எடியூரப்பாவுக்கும் தொடர்பு இல்லை: மந்திரி ஈசுவரப்பா
x
தினத்தந்தி 8 Oct 2021 6:14 PM GMT (Updated: 8 Oct 2021 6:14 PM GMT)

எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

எடியூரப்பாவின் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவின் உதவியாளர் உமேஷ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டில் வேலை செய்பவன், திருடினால் அதற்கு வீட்டின் உரிமையாளர் பொறுப்பாவாரா?. வருமான வரி சோதனை நடந்ததால் எடியூரப்பா தவறு செய்துவிட்டார் என்று அா்த்தமில்லை. பசவராஜ் பொம்மையும் உமேசை உதவியாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்.

இந்த சோதனை நடந்த பிறகு அவரை நீக்கியுள்ளதாக முதல்-மந்திரி கூறியுள்ளார். தவறை யார் செய்தாலும் தவறே. தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் அவர் வெளியே வருவார். இதில் விசேஷம் ஒன்றுமில்லை. காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றால், வருமான வரித்துறை காங்கிரஸ் தலைவர்களை குறியாக வைத்து செயல்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

இந்த சோதனை குறித்து அக்கட்சி தலைவர்கள் வாய் திறக்காதது ஏன்?. யார் மீது சந்தேகம் எழுந்தாலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள். விசாரணை அமைப்புகள் மீது காங்கிரசார் சந்தேகத்தை கிளப்பினால், அவைகள் நல்ல முறையில் செயல்பட முடியுமா?. அவற்றின் மீதான மக்களின் நம்பிக்கை நீடிக்குமா?.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.


Next Story