வருமான வரி சோதனை முடிந்ததும் கருத்து தெரிவிப்பேன்: அஜித்பவார்


வருமான வரி சோதனை முடிந்ததும் கருத்து தெரிவிப்பேன்: அஜித்பவார்
x
தினத்தந்தி 8 Oct 2021 7:30 PM GMT (Updated: 8 Oct 2021 7:30 PM GMT)

வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு அதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பேன் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

அதிரடி சோதனை
மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் ஆலைகள் மற்றும் மற்ற நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெளிப்படையாக இருக்கிறேன்...
வருமான வரித்துறை தங்களின் வேலைகளை செய்கிறது. அதிகாரிகள் இன்னும் இருக்கிறார்கள். தேடல் நடந்துகொண்டு இருக்கும்போது பேசுவதன் மூலம் அவர்களின் வேலையை நான் தடுக்க விரும்பவில்லை.வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியேறட்டும், உங்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். உங்கள் கேள்விகளுக்கான பதில் என்னிடம் உள்ளது.எனது நிலைப்பாடு எப்பொழுதும் சுத்தமாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது. நிதி விஷயங்களில் நான் ஒழுக்கமாக இருக்கிறேன். நான் எப்போதும் மக்களிடம் வரிகளை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உட்பட என்னுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள் வரியை முறையாக செலுத்த வேண்டும்.சர்ச்சைக்குரிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விற்பனை பற்றியும் ஆதாரத்துடன் நான் எடுத்துரைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வன்முறை சம்பவம்

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று அளித்த பேட்டியில், “லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தை நான் ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியதால் வருமான வரி சோதனை ஏவி விடப்பட்டு உள்ளது. ஜனநாயக நாட்டில் எங்களில் கருத்துகளை வெளிப்படையாக கூறக்கூட உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.



Next Story