காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்


காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
x
தினத்தந்தி 9 Oct 2021 1:57 AM GMT (Updated: 9 Oct 2021 2:04 AM GMT)

காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் அதிரடியாக களமிறங்கியுள்ளனர். 

அந்த வகையில், ஸ்ரீநகரில் நேற்று இரவு 8 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஒரு பயங்கரவாதி தப்பியோடிவிட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி அக்யூப் பஷீர் எனவும் அவன் லஷ்கர்-இ தெய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் எனவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரின் மேதன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை முதல் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story