குடிசைக்குள் புகுந்த லாரி - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி


குடிசைக்குள் புகுந்த லாரி - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 9 Oct 2021 5:46 AM GMT (Updated: 2021-10-09T11:17:33+05:30)

மத்திய பிரதேசத்தில் சாலையோரம் அமைந்திருந்த குடிசைக்குள் லாரி புகுந்தது. இதில் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் டோமோக் மாவட்டத்தில் உள்ள பத்யாஹர்-ஹட்டா சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அஜனி தபரியா என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் அமைந்திருந்த குடிசைக்குள் புகுந்தது.

இதில், குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் லாரியில் பயணித்த ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஆகாஷ் மகிர்வார் (18) அவரது சகோதரி மனீஷா (16) மற்றும் அவரின் சகோதரன் ஓம்கர் (14) ஆகிய 3 பேரும் இந்த விபத்தில் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 

உடல்நலக்குறைவால் இவர்களின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு உதவியாக தாய் மருத்துவமனையில் தங்கியுள்ளார். 

இதனால், நேற்று இரவு 2 சகோதரர்கள், சகோதரி என 3 பேரும் குடிசை வீட்டில் தனியாக உறங்கியுள்ளனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் விபத்து நடத்த பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.   

Next Story