திருமலையில் பிரம்மோற்சவ விழா 3-வதுநாள்: சிம்ம, முத்துப்பந்தல் வாகன சேவை


திருமலையில் பிரம்மோற்சவ விழா 3-வதுநாள்: சிம்ம, முத்துப்பந்தல் வாகன சேவை
x
தினத்தந்தி 9 Oct 2021 6:45 PM GMT (Updated: 9 Oct 2021 6:45 PM GMT)

திருமலையில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன சேவை, இரவு முத்துப்பந்தல் வாகன சேவை நடந்தது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தார்.

சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் மகாவிஷ்ணுவை வழிபட்டால் பக்தர்களுக்கு தைரியம், வீரம் வரும். சிம்ம தரிசனம் செய்தால் பக்தர்களுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கும் என்பதை உணர்த்தவே உற்சவர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் முத்துப்பந்தல் வாகன சேைவ நடந்தது.

வாகன சேவையில் பெரிய, சின்ன ஜீயர்சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரசாந்திரெட்டி, சனத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகன சேவையும், இரவு சர்வ பூபால வாகன சேவையும் நடக்கிறது.

Next Story