சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:15 PM GMT (Updated: 9 Oct 2021 8:15 PM GMT)

சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.

ரூ.2 கோடி லஞ்ச வழக்கு
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அப்போது சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.அதில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணமூர்த்தி மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரசின் உத்தரவின் பேரில் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 அதிகாரிகள் மீது...
ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சசிகலாவுக்கு எதிரான ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் கோர்ட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததாலும், வழக்கு விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று கூறியும் கர்நாடக ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஸ் சந்திரசர்மா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இதையடுத்து, ஆகஸ்டு 11-ந் தேதி இந்த வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். அதே நேரத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடந்த விசாரணையின் போது, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க 4 வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று ஊழல் தடுப்பு படை போலீசார் நீதிபதியிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

4 வாரம் காலம் அவகாசம்
இதையடுத்து, இந்த 4 வாரத்திற்குள் 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், உள்துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சதீஸ் சந்திரசர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி உள்துறை முதன்மை செயலாளர் விசாரணைக்காக ஆஜராகவில்லை. உடல் நலக்குறைவு மற்றும் சொந்த காரணங்களால் அவர் ஆஜராகாமல் இருந்தார்.

அதே நேரத்தில் 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், உள்துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகவும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, உள்துறை முதன்மை செயலாளர் 4 வாரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சதீஸ் சந்திரசர்மாவுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story