புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி கவர்னரிடம் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு


புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி கவர்னரிடம் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு
x
தினத்தந்தி 9 Oct 2021 11:00 PM GMT (Updated: 9 Oct 2021 11:00 PM GMT)

மாநில தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக முடிவெடுத்துள்ளதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

அரசியல் கட்சிகள் அதிருப்தி
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில் வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின் தேர்தல் நடத்துமாறு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.இதைத்தொடர்ந்து இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்து அறிவித்ததுடன் நவம்பர் 2, 7, 13 தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய தேர்தல் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளித்ததுடன் இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
இந்த சூழ்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் 4-வது மாடியில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்., பா.ஜ.க., தி.மு.க., சுயேச்சை, நியமன எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் செல்வம் பேசியதாவது:-

இடஒதுக்கீடு உரிமை
புதுச்சேரி நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சிகளில் உரிய இடஒதுக்கீடு செய்ய அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்ய வழி உள்ளது. இதன் அடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டது.ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இந்த இடஒதுக்கீடு உரிமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய அரசாணை வெளியிடுவதற்கு முன்பே அரசுடன் ஆலோசிக்காமல் அவசரகதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இருந்த இடஒதுக்கீடு உரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அதன்பின் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தேர்தலை நடத்தக்கூடாது
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டங்களின்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது.2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்திருப்பது சட்ட விரோதம்.

புறக்கணிக்கும் சூழல்
சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மழைக்காலம், புதுச்சேரி விடுதலை திருநாள், கல்லறை திருநாள், தீபாவளி திருநாள் போன்ற திருவிழாக்காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது.சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களுக்கு எதிரான தேர்தலை புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால் இதில் உள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும். எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி கவர்னரிடம் முறையிடுவது.தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் மாநில தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவர்னருடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் எம்.எல். ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினார்கள்.


Next Story