மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது; பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை


மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது; பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 Oct 2021 9:11 PM GMT (Updated: 10 Oct 2021 9:11 PM GMT)

மும்பையில் வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.100-ஐ தாண்டியது
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதிலும் பெட்ரோலை விட டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே சென்றது.தொடர்ந்து விலை அதிகரித்து வந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து காணப்பட்டது. விலை குறைந்துவிட்டது என வாகன ஓட்டிகள் சற்று பெருமூச்சு விட்ட நேரத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதன் விலை கிடுகிடுவென ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.இதில் கடந்த மே மாதம் இறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதேபோல டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வந்தது.இந்தநிலையில் மும்பையில் டீசல் விலை வரலாறு காணாத வகையில் ரூ.100-ஐ தாண்டி உள்ளது. நேற்று நகரில் லிட்டர் டீசல் 100.66-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலைவாசி உயர்வு
டீசல் விலை 100-ஐ தாண்டி இருப்பது லாரி போன்ற கனரக வாகன உரிமையாளர்கள், டிரைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல பண்டிகை காலம் நெருங்கிய நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.மராட்டியத்தில் மும்பை தவிர அவுரங்காபாத், அமராவதி, நாந்தெட் உள்ளிட்ட பகுதிகளிலும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது.

இதேபோல மும்பையில் பெட்ரோல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. நேற்று நகரில் லிட்டர் பெட்ரோல் 25 பைசா உயர்ந்து ரூ.110.23-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story