பூஞ்ச் எண்கவுன்டர்; மூன்று வீரர்கள் குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு


பூஞ்ச் எண்கவுன்டர்; மூன்று வீரர்கள் குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு
x
தினத்தந்தி 11 Oct 2021 7:34 PM GMT (Updated: 11 Oct 2021 7:34 PM GMT)

பூஞ்ச் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணமடைந்த மூன்று வீரர்கள் குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில்  பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த நைப் சுபேதர் ஜஸ்விந்தர் சிங், நைக் மந்தீப் சிங் மற்றும் கஜ்ஜன் சிங் ஆகியோரின் குடும்பத்துக்கு  50 லட்ச ரூபாய்  இழப்பீடும், குடும்பத்தில்  ஒருவருக்கு  அரசு வேலையும் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி  அறிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்காக தங்களுடைய உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்த தியாகம், அவர்களுடன் பணியாற்றும் சக வீரர்கள் தங்களின் கடமையில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்ற  உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நைப் சுபேதர் ஜஸ்விந்தர் சிங்கிற்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். நைக் மந்தீப் சிங்கிற்கு  திருமணமாகி  3 வயதில் ஒரு மகனும், பிறந்து 2 மாதங்களே ஆன  ஆண் குழந்தையும் உள்ளது. கஜ்ஜன் சிங்கிற்கு  4 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணமாகி   உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு தீவிரவாத கும்பல்  நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தனர். அந்த தீவிரவாத கும்பல் சாம்ரெர் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனர். அவர்களுடன்  சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story