கேரளா:பாம்பை ஏவி மனைவி கொலை - கணவருக்கு இரட்டை ஆயுள், ரூ.5 லட்சம் அபராதம்


கேரளா:பாம்பை ஏவி மனைவி கொலை - கணவருக்கு இரட்டை ஆயுள், ரூ.5 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:22 AM GMT (Updated: 13 Oct 2021 8:50 AM GMT)

*கேரளாவில் மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது

கொல்லம்:

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர்  சூரஜ் ( வயது 27 ) தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்தார். இவரது மனைவி உத்ரா ( வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக வழங்கி  உள்ளனர்.

இந்த நிலையில் சூரஜ் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

மார்ச் 2 ம் தேதி, அடூரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் உயிருக்கு பல நாட்கள் போராடினார். ஏப்ரல் 22 அன்று தான் உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவள் பெற்றோருடன் கொல்லம் மாவட்டம் அஞ்சலில் உள்ள வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் மே 7-ந்தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் பிணமாக கிடந்து உள்ளார். உத்ராவின் தந்தை விஜயசேனன் தாய்  மணிமேகலா, தங்கள் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் உத்ரா விஷ பாம்புகடித்து இறந்து விட்டதாக கூறி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது,  படுக்கையறையில் ஒரு அலமாரியின் கீழ் விஷபாம்பை கண்டனர். பாம்பு கொல்லப்பட்டு அவர்களது வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டது.

மே 7 ம் தேதி மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும்  உண்மைகள் வெளிவரத்தொடங்கியது.

சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்.  பின்னர் பாம்பு பிடிப்பவரான காளுவதிகல் சுரேசை தொடர்பு கொண்டு உள்ளார். தனது தொலைபேசியில் பாம்பு பிடிப்பவர்களின் யூடியூப் வீடியோக்களை தான் பார்த்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டு உள்ளார்.

எவ்வாறாயினும், பாம்பு கடியின் முதல் முயற்சி தோல்வியுற்று உள்ளது. அதில் உத்ரா குணமாகி வந்தார். இதை தொடர்ந்து ​​சூரஜ் மற்றொரு விஷ பாம்பை ரூ .10,000 க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.

இரவு மனைவி தூங்கும் போது, ​​சூரஜ் தான் வைத்திருந்த ஜாடியில் இருந்து நாகத்தை வெளியே எடுத்து  பாம்பை மனைவி மீது வீசி உள்ளார். பாம்பு உத்ராவை  இரண்டு முறை கடித்து உள்ளது. இதில் உத்ரா  மரணமடைந்து உள்ளார். அதிகாலையில் உத்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் சூரஜ் எதுவும் நடக்கவில்லை என்பது போல தனது அறையை விட்டு வெளியே வந்து உள்ளார்.

உத்ராவைக் கொல்ல சூரஜ் பாம்புகளுடன் இரண்டு முயற்சிகளுக்கு மேல் செய்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இது தொடர்பான வழக்கு கொல்லம் ஆறாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை "அரிதிலும் அரிதான வழக்கு" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

சூரஜுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு கோரியது இது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டு இருந்தது.

மேலும் தண்டனையின் விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. அதை தொடர்ந்து இன்று தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.மனோஜ்  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். சுரஜுக்கு  இரட்டை ஆயுள்,ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story