தேசிய செய்திகள்

‘கதிசக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி + "||" + Modi launches Rs 100 lakh crore 'Kathisakthi' project

‘கதிசக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘கதிசக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘கதிசக்தி’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையின்போது, ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பெருந்திட்டம் (மாஸ்டர்பிளான்) ஒன்று தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, நேற்று ‘கதிசக்தி’ என்ற இந்த திட்டத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். இதற்கான விழா, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்தது.


நாட்டில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு வெவ்வேறு அமைச்சகங்களில் ஒப்புதல் பெற வேண்டி இருப்பதால், திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.

முட்டுக்கட்டை அகலும்

இதை தவிர்ப்பதற்காக, பொதுவான தளம் மூலம் அனைத்துக்கும் ஒரே இடத்தில் ஒப்புதலை பெறுவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை அகற்றப்படும். பிற அமைச்சகங்களில் நடக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

மத்திய, மாநில அரசுகளின் கீழ் நடந்து வரும் பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, துறைமுகங்கள், உடான் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் ‘கதிசக்தி’ திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும். கூட்டு அணுகுமுறையுடன் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஜவுளி பூங்காக்கள், பாதுகாப்பு வழித்தடங்கள், தொழில் வழித்தடங்கள், பொருளாதார மண்டலங்கள், வேளாண் மண்டலங்கள் ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். அதன்மூலம் இந்திய வர்த்தகம் போட்டி நிறைந்ததாக மாறும்.

உலகத்தர கட்டமைப்பு

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

எதிர்க்கட்சிகள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது இல்லை. அதனால், அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அவை இடம்பெறுவது இல்லை. அனைத்து மட்டங்களிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியம் இல்லை.

அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் காலவிரயம் ஏற்படுவதை ‘கதிசக்தி’ திட்டம் மூலம் தவிர்க்கலாம். மாநில அரசுகளும் இத்திட்டத்தில் சேர்ந்து கொண்டு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க பாடுபட வேண்டும்.

செலவை குறைக்கும்

சாலை முதல் ரெயில்வே வரை, விமான போக்குவரத்து முதல் வேளாண்மை வரை பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் ஒருங்கிணைந்த முறையில் இதில் நிறைவேற்றப்படும். தளவாட செலவுகளை குறைப்பதும் இதன் நோக்கமாகும். முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்கும்.

எனது அரசின் கீழ் இந்தியா கண்டு வரும் வேகமும், அளவும் கடந்த 70 ஆண்டுகளில் காணப்படவில்லை. உதாரணமாக, 2014-ம் ஆண்டுக்கு முன்பு, 1,900 கி.மீ. ரெயில்பாதை மட்டுமே இரட்டை பாதை ஆக்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில், 9 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதை, இரட்டை பாதை ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பிரதமர் தொடங்கி வைத்த அந்த நிகழ்ச்சியிலும், அவர் பங்கேற்ற புதிய தொழில் கண்காட்சி வளாக திறப்பு விழா நிகழ்ச்சியிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் ஆகியோரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி
குஜராத் முதல்-மந்திரி, இந்தியாவின் பிரதமர் என ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
2. ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களை மேம்படுத்துவதற்கான புதிய மந்திரம் - பிரதமர் மோடி உரை
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்வாமித்வா திட்ட விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்றார்.
3. உலக நாடுகளை கவர்ந்த மோடியின் அமெரிக்க உரை!
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப்பயணத்தில், ‘குவாட்’ உச்சி மாநாடு, 76-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் மற்றும் அமெரிக்க முன்னணி தொழிலதிபர்களுடன் சந்திப்பு ஆகிய நேரங்களில், அவருடைய பேச்சுவார்த்தை, ஆற்றிய உரைகள் எல்லாமே தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தன.
4. டெல்லி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டப்பணியை மோடி பார்வையிட்டது சிந்தனையற்ற செயல்: காங்கிரஸ்
சென்டரல் விஸ்டா திட்டப்பணியை பார்வையிட்டது சிந்தனையற்ற, உணர்வற்ற செயல் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசினார்.
5. 65 மணி நேரத்தில் அமெரிக்காவில் 20 சந்திப்புகளில் பங்கேற்ற மோடி
பிரதமர் மோடி ‘குவாட்’ உச்சி மாநாடு, ஐ.நா. பொதுச்சபை கூட்டம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பு ஆகியவற்றுக்காக 4 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் குறுகிய காலத்தில் சுமார் 20 சந்திப்புகளை நடத்தி அசத்தி இருக்கிறார்.