காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் ‘முழுநேர தலைவர் நான்தான்’ - சோனியா காந்தி அதிரடி பேச்சு


காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் ‘முழுநேர தலைவர் நான்தான்’ - சோனியா காந்தி அதிரடி பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2021 12:46 AM GMT (Updated: 2021-10-17T06:16:21+05:30)

ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டாம் என்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, ‘காங்கிரஸ் முழுநேர தலைவர் நான்தான்’ என பேசினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத்தலைவர் வேண்டும், அமைப்பு ரீதியில் கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் 23 பேர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம், டெல்லியில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் முதன்முதலாக அனைவரும் நேரில் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல், லகீம்பூரில் போராடிய விவசாயிகள் படுகொலை, விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த காரிய கமிட்டி கூட்டம் நடந்ததால் முக்கியத்துவம் பெற்றது.

இந்த கூட்டத்துக்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), சரண்ஜித் சன்னி (பஞ்சாப்), அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா என 57 பேர் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து சோனியா காந்தி பேசியபோது, தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சரியான பதிலடியும் கொடுத்தார்.

அப்போது அவர், “நான்தான் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர். நான் வெளிப்படையாக பேசுவதை எப்போதும் பாராட்டி வந்திருக்கிறேன். யாரும் ஊடகங்கள் வழியாக என்னுடன் பேசத்தேவையில்லை. இங்கே நாம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விவாதிக்கலாம். இந்த 4 சுவர்களுக்கு வெளியே பேசக்கூடியது, காரிய கமிட்டி கூட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவைபற்றித்தான் இருக்க வேண்டும்.” என காட்டமாக கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதாவது:-

நான் பொது முக்கியத்துவம் வாய்ந்த, கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்று நானும் அவற்றை பிரதமரிடம் எடுத்துச்சென்றிருக்கிறேன். ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கூட்டறிக்கைகள் வெளியிடுகிறோம். நமது உத்தியை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைத்துள்ளேன்.

நடக்க உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். நம் முன் எத்தனையோ சவால்கள் உள்ளன. நாம் ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்து கட்சி நலன்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் இந்த தேர்தலில் நாம் நன்றாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஒட்டுமொத்த கட்சிக்கும் புத்துயிரூட்ட வேண்டியதிருக்கிறது. ஆனால் இதற்கு கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டும். கட்சியின் நலன்களை முதன்மையாக வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சுய கட்டுப்பாடும், ஒழுங்கும் வேண்டும்.

காங்கிரஸ் தலைவரை ஜூன் 30-ந்தேதிக்குள் தேர்ந்தெடுத்து விட முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் அது காலவரையின்றி ஒத்திபோடப்பட்டது. இன்று கட்சியின் அமைப்புத்தேர்தல்கள் விவகாரத்தில் ஒரு தெளிவை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முழுமையான அமைப்புத் தேர்தல்களுக்கான அட்டவணை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிற தருணத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றம் மூலமாக இந்த கருப்பு சட்டங்களை கொண்டு வந்ததில் இருந்து ஓராண்டு காலத்துக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடக்கிறது.

லகிம்பூரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், பா.ஜ.க.வின் மனநிலையையும், விவசாயிகளின் போராட்டத்தை அது எவ்வாறு எடுத்துக்கொள்கிறது, விவசாயிகள் தங்கள் உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க மேற்கொண்டுள்ள உறுதியான போராட்டத்தை பா.ஜ.க. எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் காட்டுகிறது.

தேசிய சொத்துகளையெல்லாம் விற்பனை மட்டும் செய்துகொண்டு பொருளாதாரத்தை மீட்டு வருவதாக பா.ஜ.க. அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் கூட்டாட்சி என்பது வெறும் கோஷமாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களை பின்தங்கிய நிலையில் வைக்கும் வாப்பை மத்திய அரசு தவற விட்டதில்லை.

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினர் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இது கடும் கண்டனத்துக்கு உரியது.

வெளிநாட்டு கொள்கையைப் பொறுத்தமட்டில், பிரதமர் நரேந்திரமோடி அர்த்தமுள்ள விதத்தில், எதிர்க்கட்சிகளை நம்பிக்கைக்கு உட்படுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், அதன் மீது இருந்த பரந்த ஒருமித்த கருத்து சேதம் அடைந்துள்ளது.

நமது எல்லைகளிலும், பிற முனைகளிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். கடந்த ஆண்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேசுகையில் சீனா நமது நாட்டில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்றார். ஆனால் அதன் பிறகு அவர் மவுனம் காப்பது நாட்டுக்கு பெரும் இழப்பாகும்.

அத்தியாவசியப்பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.900-க்கும், சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.200-க்கும் விற்கப்படும் என நாட்டில் யாரேனும் கற்பனை செய்தது உண்டா? இது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக ஆகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் உள்கட்சி தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

5 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி மீண்டும் ஏற்க வேண்டும் என்று முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), சரண்ஜித் சன்னி (பஞ்சாப்) உள்பட பல தலைவர்கள் வலியுறுத்தி பேசினார்கள்.

தன் மீது நம்பிக்கை கொண்டு, தலைமை பொறுப்பை ஏற்குமாறு கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட ராகுல் காந்தி, இது பற்றி பரிசீலிப்பேன் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் சூழல், விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம் ஆகியவை பற்றி 3 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

காரிய கமிட்டி கூட்டம் முடிந்தபின்னர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதிக்கும், செப்டம்பர் மாதம் 20-ந்தேதிக்கும் இடையே நடைபெறும்” என அறிவித்தார்.

அதற்கு முன்பாக, முதலில் வேட்பாளர்களுக்கான உறுப்பினர்கள் முதல் பட்டியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15-ந்தேதி வரை அறிவிக்கப்படும், மாநில காங்கிரஸ் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பொருளாளர்கள், மாநில கட்சி உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் ஜூலை 21-ந்தேதி முதல் ஆகஸ்டு 20-ந்தேதி வரை நடக்கும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ராகுல் காந்தியே தலைவர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story