காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை-தலைவர்கள் கண்டனம்


காஷ்மீரில்  வெளிமாநிலங்களை சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை-தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 17 Oct 2021 2:11 AM GMT (Updated: 17 Oct 2021 2:11 AM GMT)

காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

அந்தவகையில், பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 30) என்ற வாலிபர் ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் தெருவோரத்தில் பானிபூரி விற்பனை செய்து வந்தார். நேற்று அங்கு வந்த பயங்கரவாதிகள், அரவிந்த் குமாரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அரவிந்த் குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்போல புல்வாமா மாவட்டத்தில் தச்சுத்தொழில் செய்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாகிர் அகமது என்பவர் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைகளுக்கு உமர் அப்துல்லா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story