கனமழை, வெள்ளம்: கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு


கனமழை, வெள்ளம்: கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 6:55 AM GMT (Updated: 18 Oct 2021 6:55 AM GMT)

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாகநேற்றும் அங்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும்வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதற்கிடையே கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களின் உயிர்களையும் காவு வாங்கி வருகின்றன.

 அந்தவகையில் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை  27 ஆக அதிகரித்துள்ளது. அவசர உதவிகளுக்கு  பொதுமக்கள் 1912 -என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கேரள பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



Next Story