நான் கவர்னராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது; சத்ய பால் மாலிக்


நான் கவர்னராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது; சத்ய பால் மாலிக்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:35 AM GMT (Updated: 18 Oct 2021 11:50 AM GMT)

நான் கவர்னராக இருந்தபோது ஸ்ரீநகருக்கு உள்ளேயே பயங்கரவாதிகள் நுழைய முடியாது என மேகாலயாவின் கவர்னர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.

ஷில்லாங்,

மேகாலயாவின் கவர்னராக சத்ய பால் மாலிக் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார்.  இந்நிலையில் அவர் கூறும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் கவர்னராக நான் இருந்தபோது பயங்கரவாதிகளால் ஸ்ரீநகரின் 50 முதல் 100 கி.மீ.க்கு உள்ளேயே நுழைய முடியாது.  ஆனால் தற்போது, ஸ்ரீநகரில் ஏழை மக்களை பயங்கரவாதிகள் கொன்று வருகின்றனர்.  இது உண்மையில் வருத்தம் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.  இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.  அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில் பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார்.  இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர்.

இதேபோன்று புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர்.  பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர்கள் ராஜா ரேஷி தேவ் மற்றும் ஜோகிந்தர் ரேஷி தேவ் என தெரிய வந்துள்ளது.  சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார்.  இவர்கள் 3 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதனை சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.  இதன்பின்பு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தினையும் வெளிப்படுத்தி உள்ளார்.  பண்டிகை காலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2019ம் ஆண்டு அக்டோபர் வரை காஷ்மீரின் கவர்னராக மாலிக் இருந்துள்ளார்.  அவரது பதவி காலத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் எடுக்கப்பட்டது.


Next Story