கேரளாவில் மழை நீடிக்கிறது: இடுக்கி உள்பட 10 அணைகளில் உபரிநீர் திறப்பு


கேரளாவில் மழை நீடிக்கிறது: இடுக்கி உள்பட 10 அணைகளில் உபரிநீர் திறப்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:16 AM GMT (Updated: 20 Oct 2021 12:16 AM GMT)

கேரளாவில் மழை நீடித்து வருகிறது. இடுக்கி உள்பட 10 அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

திருவனந்தபுரம்,

அரபிக்கடலில் திடீரென உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோட்டயம், இடுக்கி உள்பட 11 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. மேலும் மலையோர கிராமங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் மற்றும் இடுக்கி மாவட்டம் கொக்கையார் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சரிந்தன. இதில் வீடுகளில் வசித்த பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

பலி 38 ஆக உயர்வு

கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிளாப்பள்ளி, காவாலி பகுதிகளில் மட்டும் மண்ணில் புதைந்த 13 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

கேரளா முழுவதும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மழை சற்று குறைந்து உள்ளது. இதனால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

உபரிநீர் திறப்பு

இதற்கிடையில் கேரள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பிரதான அணையான இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. மேலும் காக்கி அணை, இடைமலையாறு அணை, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டலா, பேச்சி உள்பட 10 அணைகளின் நீர்மட்டமும் அபாய அளவை எட்டியது.

இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இடுக்கி அணை திறக்கப்பட்டதால், பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை நதி உள்பட முக்கிய ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வருகிற 24-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story