வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடம்: மந்திரி முருகேஷ் நிரானி


வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடம்: மந்திரி முருகேஷ் நிரானி
x
தினத்தந்தி 21 Oct 2021 8:42 PM GMT (Updated: 21 Oct 2021 8:42 PM GMT)

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். இதில் தொழில் அதிபர்களை சந்தித்து, கர்நாடகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். கல்ப் இஸ்லாமிக் முதலீட்டு குழு, கர்நாடகத்தில் ரூ.3,500 கோடிக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூருவில் உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு நீர், மின்சாரம், நிலம் ஆகியவற்றை வழங்குகிறோம். அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூருவில் நடத்தப்படுகிறது. விண்வெளி, பாதுகாப்புத்துறையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் விண்வெளித்துறையின் மிகப்பெரிய மையமாக கர்நாடகம் திகழ்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம், அந்த நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு நோக்கத்திற்கு நிலத்தை பயன்படுத்துவது தெரியவந்தால், அந்த நிலம் திரும்ப பெறப்படும்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.


Next Story