இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக கவர்னர்!


இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக கவர்னர்!
x
தினத்தந்தி 23 Oct 2021 1:51 AM GMT (Updated: 23 Oct 2021 1:51 AM GMT)

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி, 

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந்தேதி டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த சூழலில் நேற்று மாலை 5.15 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் விஜயமாக விமானத்தில் புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பிரதமரிடம் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2 அல்லது 3 நாள் டெல்லியில் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.


Next Story