சட்டசபைத் தேர்தல்: “கோவாவுக்கு புதிய விடியலைக் கொண்டு வருவோம்” - மம்தா பானர்ஜி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Oct 2021 4:24 AM GMT (Updated: 23 Oct 2021 4:24 AM GMT)

சட்டசபைத் தேர்தல் எதிரொலியாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வரும் 28-ஆம் தேதி கோவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கொல்கத்தா,  

மேற்குவங்காள மாநிலத்தில் பாஜனதா எழுச்சியைத் தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி, மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அந்த உத்வேகத்தோடு கோவா மாநிலத்தில் கால்பதிக்க வியூகம் மம்தா பானர்ஜி அமைத்து உள்ளார். 

கோவா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பாஜனதா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு அந்த கட்சி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜனதா 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உள்ளூர் கட்சிகள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பின்னர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜனதா ஆட்சி அமைத்தது.

தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டது பாஜனதா கடந்த தேர்தலிலேயே அந்த அதிருப்தி எதிரொலித்தது. எனவே இந்த தேர்தலில் பாஜனதாவுக்கு பின்னடைவு காத்திருக்கும் என்று மம்தா பானர்ஜி கருதுகிறார். காங்கிரசும் எழுச்சி பெற்றதாக தெரியவில்லை. எனவே இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வரும் 28-ஆம் தேதி கோவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், “வரும் 28ஆம் தேதி கோவாவுக்கு எனது முதல் பயணத்திற்கு நான் தயாராகும் நிலையில், பாஜனதா மற்றும் அவர்களின் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக கோவா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவா மக்களின் உண்மையான அரசாகவும், அவர்களின் விருப்பங்களை நனவாக்க அர்ப்பணிப்புடனும் இருக்கும் புதிய அரசை அமைப்பதன் மூலம் கோவாவிற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டு வருவோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 



Next Story