பா.ஜனதாவில் எடியூரப்பா தனது முகவரியை தேடி கொள்ள வேண்டும்: டி.கே.சிவக்குமார்


பா.ஜனதாவில் எடியூரப்பா தனது முகவரியை தேடி கொள்ள வேண்டும்: டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 23 Oct 2021 8:07 PM GMT (Updated: 23 Oct 2021 8:07 PM GMT)

பா.ஜனதாவில் எடியூரப்பா தனது முகவரியை தேடி கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

டி.கே.சிவக்குமார் பிரசாரம்

கர்நாடகத்தில் காலியாகி உள்ள சிந்தகி சட்டசபை தொகுதிக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பிரசாரம் செய்திருந்தார். நேற்று முதல் 2-வது கட்டமாக சிந்தகி தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது அவரிடம், சட்டசபை தேர்தலுக்கு பின்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி முகவரி இல்லாமல் போய் விடும் என்று எடியூரப்பா கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

எடியூரப்பா தனது முகவரியை...

எடியூரப்பாவிடம் இருந்து பா.ஜனதா மேலிடம் முதல்-மந்திரி பதவியை பறித்தது. அவர், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் போது கண்ணீர் மல்க பேசினார். அவரது கண்ணீர் அலையில் கா்நாடகத்தில் பா.ஜனதா காணாமல்போய் விடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கி விட்டு, பா.ஜனதாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதனால் பா.ஜனதாவில் எடியூரப்பா தனது முகவரியை தேடி கொள்ள வேண்டும். அதன்பிறகு, அவர் காங்கிரஸ் பற்றி பேசட்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பதால், 2 என்ஜின் கொண்ட அரசு என்று கூறி வருகின்றனர். அப்படி இருக்கையில் விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்ந்து விட்டதா?. மாநிலத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து விட்டதா?. மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை. இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். சிந்தகி, ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story