வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு


வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 24 Oct 2021 9:45 PM GMT (Updated: 24 Oct 2021 9:45 PM GMT)

ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46-க்கு விற்கப்படுகிறது.

இந்தியா தனது பெட்ரோல்-டீசல் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை

ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. எனவே சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது.அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தி அதிகரிக்கவில்லை

கொரோனாவில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை தற்போது ஏறுமுகமாக உள்ளது. பொது முடக்கங்கள் விலக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுக நிலைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது.ஆனால் கொரோனாவையொட்டி உற்பத்தியை குறைத்துக்கொண்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தற்போது தேவை அதிகரித்த போதும், எண்ணெய் உற்பத்தியை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை.

உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தபோதும், கணிசமான அளவுக்கு உற்பத்தியை அந்த நாடுகள் அதிகரிக்கவில்லை. இதைப்போல அமெரிக்காவும் தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக்கொண்டு உள்ளது.

அதிகமான வரி விதிப்பு

இந்த காரணிகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018-ம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகம் ஆகும்.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இது பெட்ரோல்-டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்று வருகிறது.

வரலாறு காணாத உயர்வு

இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

அந்தவகையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் ரூ.104.68, கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது.இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.74 ஆகவும் உச்சத்தில் இருந்தது.

ஒரே மாதத்தில் 21 முறை உயர்வு

இந்தியாவில் கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24-ந் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.முன்னதாக கடந்த மே 4 முதல் ஜூலை 17-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44 வரையும், டீசல் விலை ரூ.9.14 வரையும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இது, அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் எழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறுமாறு மத்திய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல், பிரியங்கா கண்டனம்

இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசு வரி கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பெட்ரோல்-டீசல் விலையில் வரி கொள்ளை அதிகரித்து வருகிறது. எங்காவது தேர்தல் நடப்பதாக இருந்தால் இதில் இருந்து சற்று நிம்மதி கிடைக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் தளத்தில், ‘பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடிஜியின் அரசு பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. அதிகமான வேலையில்லா திண்டாட்டம், அரசு சொத்துகள் விற்பனை, ஒரு ஆண்டில் அதிகமான பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அனைத்தும் மோடி அரசில்தான் நடக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆண்டு மட்டும் பெட்ரோல் விலை ரூ.23.53 உயர்ந்திருப்பதாக வெளியான ஊடக செய்தி ஒன்றையும் அதில் அவர் இணைத்திருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

இதைப்போல காங்கிரஸ் கட்சியும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. மோடி அரசு வாக்களித்த ‘சிறந்த நாட்கள்’ இவைதான் என கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே பெட்ரோல், டீசலுடன் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

தலைநகர் கொல்கத்தாவில் நடந்த இந்த போராட்டத்தில் காலி சிலிண்டர் ஒன்றை அலங்கரித்து எடுத்து வந்த கட்சி தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் பிரதமர் மோடியின் உருவபொம்மையையும் எரித்தனர்.

இவ்வாறு நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.


Next Story