சோனியா காந்தி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 4:00 AM GMT (Updated: 26 Oct 2021 7:07 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி, போராட்டத் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அக்டோபர் 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உள்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும், அதன்மூலம் அக்கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்னும் குரல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story