கேரளாவில் பயங்கரம்..! மாணவிகள் கழிவறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்


image courtesy:mathrubhumi.com
x
image courtesy:mathrubhumi.com
தினத்தந்தி 26 Oct 2021 5:21 AM GMT (Updated: 26 Oct 2021 5:21 AM GMT)

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்ணூர்,

கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் உள்ள ஆரளம் கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன . மாணவிகள் கழிவறையில் இருந்த தவிடு வைத்திருந்த வாளியின் உள்ளே இருந்து இந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

கேரளாவில் நவம்பர்-1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் தூய்மைப்பணியாளர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அந்த பெண்மணி மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் இருந்த தவிடு வைத்திருந்த வாளியின் உள்ளே தேங்காய் போன்ற பொருள் இருப்பதை பார்த்துள்ளார். 

முதலில் தேங்காய் என நினைத்த அந்த பெண்மணி, அவற்றை தொட்டுப் பார்த்த பின் வித்தியாசமாக இருந்ததால்  தேங்காய் அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். உடனே பள்ளியின் சமையல்காரர் நாராயணன் என்பவர் தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு அந்த வெடிகுண்டுகளை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். பின்னர் இருவரும் சுதாரித்துக் கொண்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விஷயத்தை கூறியுள்ளனர். இந்த தகவல்  உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த ஆரளம் உதவி ஆய்வாளர் வி வி ஸ்ரீஜேஷ் அவற்றை ஆய்வு செய்து சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் என்பதை கண்டுபிடித்தார். உடனே, கண்ணூரில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து  வந்து வெடிகுண்டுகளை அருகில் அமைந்துள்ள செம்மண் குவாரிக்கு எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்தனர்.


அதன்பின், போலீசார் பள்ளி வளாகத்தினுள் விரிவான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறையின் பின்புறம் உள்ள சுவரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களின் கால்தடங்கள் பதிவாகி இருப்பதை கண்டறிந்தனர். மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணையை  போலீசார் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story