பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் புதிய கட்சி குறித்து நாளை அறிவிப்பு...?


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் புதிய கட்சி குறித்து நாளை அறிவிப்பு...?
x
தினத்தந்தி 26 Oct 2021 6:37 AM GMT (Updated: 26 Oct 2021 6:37 AM GMT)

பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி,  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து, கேப்டன் அமரிந்தர் சிங் திடீர் பயணமாக  டெல்லி சென்றார்.அங்கு பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். ஆனால்  பா.ஜ.க.வில்  இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக டுவிட்டரில் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கேப்டன் அமரிந்தர் சிங், தனது புதிய கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால், கேப்டன் அமரிந்தர் சிங் அக்டோபர் 27 ( நாளை )அன்று சண்டிகரில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று டுவீட் செய்துள்ளார்.

Next Story