அதிமுக அரசு கூறியதால் தான் சிசிடிவி கேமிராவை அகற்றினோம் - அப்போலோ நிர்வாகம் விளக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Oct 2021 7:34 AM GMT (Updated: 26 Oct 2021 12:26 PM GMT)

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக  நடந்துகொள்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் சூழலில், எங்களது மருத்துவர்களையே தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கின்றனர். நாங்கள் கொடுக்கும் தகவல்களையெல்லாம் ஆறுமுகசாமி ஆணையம் கசியவிடுகிறது. இதனால் எங்கள் நற்பெயர் கெட்டுப்போகிறது. இதனால் இதை தடுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடக்கூடிய உரிமை எங்களுக்கு இருக்கிறது. 

அந்த உரிமையின் அடிப்படையில்தான் ஆணையம் முன்பு ஆஜராக முடியாது என்று தெரிவிக்கிறோம். நாங்கள் ஆணையத்தை கலைக்க கோரவில்லை. ஆனால் ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறவில்லை. அப்படி இருக்க மருத்துவ ரீதியிலான விவரங்களை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது. நீதிமன்றத்தில் என்ன விஷயங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கிறோம். ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன என்று அப்பலோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story