பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவர் - காஷ்மீர் பாஜக தலைவர் பேச்சு


பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவர் - காஷ்மீர் பாஜக தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 26 Oct 2021 9:40 AM GMT (Updated: 26 Oct 2021 9:40 AM GMT)

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளத்தில் இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவ/மாணவிகள் கொண்டாடினர். 

மருத்துவக்கல்லூரி விடுதியில் திரண்டிருந்த மாணவ/மாணவிகள் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடினர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாதுகாப்பு படையினர் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மாணவ/மாணவிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரிகள் மீது ஏன் இவ்வளவு கோபம்? சிலர் கொலைவெறிக் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். துரோகிகளைச் சுட வேண்டும் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறந்துவிடவில்லை’ என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மெகபூபா முப்தியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரானா கூறுகையில், ,மெகபூபா முப்தி ‘தலீபானிய எண்ணங்களுடன்’ உள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக சிறையில் தள்ளப்படுவார்கள்’ என்றார்.

Next Story